search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசைத்தறி ஜவுளி"

    பல்லடத்தில் விசைத்தறி ஜவுளி சந்தையை அரசு அமைத்து தர வேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். #gkvasan

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை முன்னேற்றம் அடைந்து இருப்பது மகிழ்ச்சியைஅளிக்கிறது. அவர் பரிபூரண குணம் அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த எந்த திட்டமாக இருந்தாலும் அதனை அரசு அறிவித்து செயல்படுத்தும் போது அதனை ஏற்க மக்கள் விரும்பவில்லை என்றால் அத்திட்டத்தை கட்டாயப்படுத்தி மக்களிடம் திணிக்கக்கூடாது. மக்கள் விரும்புகின்ற வகையில் திட்டங்களை செயல்படுத்துவது தான் அரசின் கடமையும் ஜனநாயகமும் ஆகும். 

    மது இல்லாத தமிழகம் என்பது தான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் குறிக்கோள். ஆகும். புதியதாக மதுக்கடை திறக்கக்கூடாது என்பதில் எங்கள் கட்சி கொள்கையுடன் உறுதியாக உள்ளோம். டாஸ்மாக் மதுபானக் கடை செயல்படும் நேரத்தை குறைப்பதோடு படிப்படியாக மதுக் கடைகளின் எண்ணிக்கையையும் அரசு குறைக்க வேண்டும்

    பல்லடம், சோமனூர் பகுதியில் 2லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகிறது. நூல் விலை ஏற்றத்தாழ்வுகளால் ஜவுளி உற்பத்தி தொழில் பாதிப்படைந்துள்ளது. ஆண்டு முழுவதும் நூல் சீரான விலையில் விற்பனைக்கு கிடைக்க வேண்டும். விசைத்தறியாளர்களுக்கு இடைதரகர் இன்றி நேரடியாக தங்களது உற்பத்தி ஜவுளி ரகங்களை விற்பனை செய்ய பல்லடத்தை மையமாக கொண்டு விசைத்தறி ஜவுளி சந்தையை அரசு அமைத்து தர வேண்டும்.

    அதன் மூலம் விசைத் தறியாளர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையும். பல்லடத்தில் ஏராளமான கோழிப்பண்ணைகள் இருப்பதால் கோழி இறைச்சியை பதப்படுத்திட குளிரூட்டு மையம் அமைக்க வேண்டும். பல்லடம் நகரில் அதிக வாகன எண்ணிக்கையால் போக்குவரத்து நெருக்கடி உள்ளது அவற்றை போக்க அரசு உடனே புறவழிச்சாலை அமைக்க வேண்டும். விவசாய பகுதிகளில் மின் கம்பி மற்றும் கம்பம் பல ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருப்பதால் அடிக்கடி மின்சார விபத்துக்கள் நிகழ்கின்றன. அத்துடன் மின் தடையால் மக்கள் பாதிப்பதோடு திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.அவற்றை தவிர்க்கும் வகையில் அரசு மின் கம்பி மற்றும் மின் கம்பங்களை உடனே மாற்றியமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பேட்டியின் போது காங்கேயம் முன்னாள் எம்.எல்.ஏ.விடியல் சேகர், மாநில நிர்வாகிகள் திருப்பூர் மோகன்கார்த்திக், யுவராஜா,குனியமுத்தூர் ஆறுமுகம் உள்ளிட்டோர் இருந்தனர். முன்னதாக பல்லடம் பனப்பாளையம் பெருமாள் கோவில் முன்பு ஜி.கே.வாசனுக்கு திருப்பூர் மாவட்ட பொருளாளர் ராமசாமி, மாவட்ட துணைத் தலைவர் ஜெகதீசன், நகர தலைவர் பிரண்ட்ஸ் முத்துக்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திக் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். #gkvasan

    ×